காவிரியாறு தலைக்காவேரியில் தொடங்கி ஆடு தாண்டு காவேரி வரைக்குமே அழகுதான்னு எனக்குள்ளவே சொல்லிக்கிட்டு கையிலிருந்த ஐந்து பூ மார்க் பீடியை ஒரு முறை ஆழமாக இழுத்து விட்டுக்கொன்டேன், பீடிதான் அவசரத்திற்கு தூக்கி எறியலாம் காசுக்கு பெரிய சேதமுமில்லை. நெளி நெளியாக ஓடி பெண்களின் கன்னகுழிகளை போல சின்ன சின்ன சூழல்களை ஏற்படுத்தி கொண்டிருந்த காவிரியின் நீர்பரப்பை அதன் ஓரத்தில் வளர்ந்திருக்கும் முரட்டு ஆலமரத்திலிருந்து ஆத்து பக்கமாக நீண்டு வளர்ந்திருந்த பெரிய கிளையில் வசதியாக உட்க்கார்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன், கண்கள் அதை மும்முரமாக தேடிக்கொண்டு அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தது. அதை தேடும் ஆர்வத்தில் பீடி தீர்ந்தது கூட தெரியாமல் இழுத்து புகை வராததால் பீடியின் கங்கை ஒரு முறை வெறுப்புடன் பார்த்து விட்டு அடுத்த பீடியை அனிந்திருந்த கால்சட்டை பாக்கேட்டிலிருந்து எடுத்து பற்ற வைத்துவிட்டு பக்கத்திலிருந்த மர பொந்தில் பீடியையும் லைட்டரையும் வைத்தேன் கவணம் மீண்டும் தண்ணீரில் திரும்பியது.